ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீத பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசியதாவது:
தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின் அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது. மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். அரசியல் சாசனம் என்பது வெறும் தொகுப்பு அல்ல. அது நமது ஆன்மா, உணர்வு. இந்திய அரசியல் சாசனமே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு பாதை அமைத்து கொடுத்தது. 3வது முறையாக எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி. நமது அரசியல் சாசனம் கலங்கரை விளக்கம். அது தான் நமக்கு வழிகாட்டுகிறது. (எதிர்க்கட்சிகள் முழக்கம்)
இந்தியாவின் அரசமைப்பை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான். அரசமைப்பின் நகலை இப்போது கையில் வைத்துக்கொண்டு குதிப்பவர்கள், குடியரசு தினம் இருக்கும்போது தனியாக அரசியல் சாசன தினம் எதற்கு என கேட்டனர். மக்கள் கொடுத்துள்ள வெற்றியால் இந்திய பொருளாதாரம் 3ம் இடத்திற்கு செல்லும். பொருளாதாரத்தை உயர்த்துவது சாதாரணமானது அல்ல. அதற்கான உழைப்பை நாங்கள் கொடுத்துள்ளோம். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு , மரியாதை உயர்ந்துள்ளது.
(மோடி பேசிக்கொண்டிருந்தபோது எதிர்க்கட்சிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளியே சென்று சர்வாதிகாரம் ஒழிக என ஆர்ப்பாட்டம் நடத்தினர். ) அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். சிலருக்கு உண்மையை சொன்னால் பிடிக்காது. இந்த அவையை அவமரியாதை செய்து விட்டு வெளியேறுகிறார்கள். விவசாயிகள் கடன் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.