இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பல மாதங்களாக மோதல் நடக்கிறது. காசாவை தொடர்ந்து, ரபாவிலும் இரு தரப்புக்கு இடையே சண்டை நடக்கிறது. இந்நிலையில் நேற்று, ரபாவில் உள்ள மருத்துவமனைக்கு ஐ.நா., அதிகாரிகள் வாகனத்தில் சென்றனர். அப்போது அந்த வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், வாகனத்தில் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். விசாரணையில், உயிரிழந்த அதிகாரி இந்தியாவைச் சேர்ந்த வைபவ் அனில் காலே என்பதும், அவர் இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றியதும், 2022ல், முன்கூட்டியே ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் தெரிய வந்தது. மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த காலே இரு மாதங்களுக்கு முன், ஐ.நா., பாதுகாப்பு துறையில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.