இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. டி20 போட்டிக்க சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒரு நாள் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் இருப்பார். இரு போட்டிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக இருப்பார்.
கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவில்லை. அதேபோல் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்வாட் ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பிடிக்கவில்லை.
இந்த நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணி தேர்வை கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய அணியின் தேர்வுஆச்சரியமாக உள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்த அபிசேக் சர்மாவுக்கு அணியில் இடமில்லை.சில வீரர்கள் சிறப்பாக செய்தாலும் அது தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. அணிக்கு வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.