இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளன. இதில் முன்னணி வீரர்களான ரோகித்,ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாட உள்ளனர்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்காமல் சொதப்பி இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
எனவே இந்திய முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டிப்பாக விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து முன்னணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆட தயாராகி விட்டனர்.
முன்னணி வீரரான விராட் கோலி, கழுத்து வலி காரணமாக 23-ம் தேதி தொடங்கும் டில்லி அணியின் சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் இடம்பெறவில்லை. டில்லி அணியின் அடுத்த லீக் ஆட்டத்தில் (30-ந்தேதி ரெயில்வே அணிக்கு எதிராக) விளையாட தயாராக இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனை டில்லி அணி நிர்வாகமும் உறுதி செய்தது.
விராட் கோலி கடைசியாக 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போதுதான் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.