இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவர் அதிகாலையில் சற்று கண் அசந்ததால் கார் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பப்பட்டது. ஆனால் இன்னும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய எனவும் வேண்டும் எனவும் இந்த அறுவை சிகிச்சை ஆறு வாரங்களுக்குப் பிறகு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் இந்த ஆண்டு பெரும்பான்மை நாட்களுக்கு மேல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு 2023க்கான ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என முன்னாள் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, தகவல் தெரிவித்துள்ளார்.