பருவமழைக் காலங்களில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்களில் எப்போதேனும் பேரிடர்கள் ஏற்படுமானால், அப்போது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உதவ ஏதுவாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோர காவல் படையின் கிழக்குப் பகுதி சார்பில் 29 பேரிடர் மீட்பு நிவாரண குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 148 வீரர்களைக் கொண்ட இக்குழுக்கள் போதிய மிதவைகள், படகுகள், உயிர்காப்பு மற்றும் மீட்புக்கான உபகரணங்கள், ஜாக்கெட்டுகள் போன்றவற்றுடன் தயார் நிலையில் உள்ளன. அவர்களில் 10 குழுக்கள் சென்னை மாநகருக்கென்று பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது . மேலும் வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் தற்போது நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு, கடலில் மீன் பிடித்து வரும் படகுகள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும், நிலைமை சீரடையும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடலில் ரோந்து சென்று கொண்டிருக்கும் கடலோர காவல் படை வீரர்களால் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.