இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. நேற்று நாக்பூரில்முதல்நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் சேர்த்தது.
அதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
“இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருநாள் போட்டிகளில் நாங்கள் விளையாடி ரொம்ப காலம் ஆகிவிட்டது. எனவே சரியான நேரத்தில் இந்த வெற்றியை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். அந்த வகையில் இந்த வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியை ஆரம்பத்திலேயே இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக தொடங்கி இருந்தனர்.
ஆனாலும் மீண்டும் எங்களது பந்து வீச்சாளர்களால் ஆட்டத்திற்குள் வந்தோம். அதேபோன்று இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். ஒட்டுமொத்தமாகவே அணியின் இந்த செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.
நாக்பூர் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.இதன் மூலம் அவர் சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சிறப்பையும் பெற்றார்.
அத்துடன் 10 பந்துகளில் 12 ரன்களும் எடுத்தார். இதன் மூலம் இந்தியா, இங்கிலாந்து போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா முதலிடம் பிடித்தார். 600 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார். அத்துடன் 600 விக்கெட்டுகளுடன், 6ஆயிரம் ரன்கள் சேர்த்த 2 வது இந்தியர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது.