ஆஸ்திரேலியாவுடனான டி-20 தொடரின் 2வது போட்டி நேற்று கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் ஆகியோர் அடுத்தடுத்து அரை சதம் பதிவு செய்தனர். பவர்பிளே ஓவர்கள் முடிவில் 77 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஜெய்ஸ்வால், 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் மற்றும் கெய்க்வாட் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிஷன், 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ருதுராஜ். ரிங்கு சிங், 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்தனர்.
236 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. மேத்யூ ஷார்ட் 19 ரன்களில் முதல் விக்கெட்டானார். கடந்த போட்டியில் சதமடித்த ஜோஷ் இங்கிலிஷ் இம்முறை 2 ரன்களில் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 12, ஸ்மித் 19 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினர். இதன்பின் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் இணைந்து ஓரளவுக்கு அணியை மீட்டெடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். டிம் டேவிட் 37 ரன்களில் வீழ, ஸ்டோய்னிஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதன்பின் ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதிநேரத்தில் ஆஸ்திரேலிய மேத்யூ வாட் 42 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி ஆகும். இந்திய அணி தரப்பில், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.