திருச்சி மாவட்டம், சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் விவசாயி. இவரது மனைவி அனுராதா. இவர்களின் மகள் மகள் அமிர்தா (14). இவர் கூத்தூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே வில்வித்தையில் அதிக ஈடுபாடு உள்ளவர். இவர் இந்திய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்று கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக திருச்சியைச் சேர்ந்த ராக்போர்ட் ஆர்ஜரி அகாடமி பயிற்சியாளர் டாக்டர் ராஜதுரை இவருக்கு பயிற்சியை அளித்து வந்தார். இதற்கு முன் நடந்த வில்வித்தை போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளை வென்றுள்ளார் அமிர்தா. இந்நிலையில், அகில இந்திய அளவில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த வில்வித்தை போட்டியில் 29 மாநிலங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், தமிழ்நாட்டில் இருந்து திருச்சி, சென்னை, கோவையைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் மாணவி அமிர்தா பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் மாணவி அமிர்தா. இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ச. கண்ணனூர் பேரூராட்சி 11- வார்டு கவுன்சிலர் கனிமொழி, தி. மு. க. ஒன்றிய பிரதிநிதி ரெங்கபிரபு ஆகியோர் மாணவியின் இல்லத்திற்கே சென்று அவரைப் பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்தினர்.