ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 4 நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் இந்திய யு19 அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய யு19 அணியில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியா யு19 அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 4 நாட்கள் நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. செப்.21 முதல் செப்.26 வரை 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரி மைதானத்தில் நடக்கவுள்ளது. அதன்பின் செப்.30 முதல் அக்.10 வரை 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய யு19 அணிக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அமான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணைக் கேப்டனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ருத்ர படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மட்டும் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. கார்த்திகேயா, சமித் டிராவிட், சமர்த் மற்றும் ஹர்திக் ராஜ் ஆகிய 4 பேரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் தான். அதில் சமித் டிராவிட் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகனாவார். கூச் பெஹார் டிராபி, விஜய் மெர்ச்சண்ட் டிராபி மற்றும் என்சிஏ பயிற்சி முகாமில் ஆகியவற்றில் கலந்து கொண்ட வீரர்களின் ஆட்டத்தை வைத்து இந்த அணி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
டி20 தொடரிலும் விளையாடி வருகிறார். தந்தையின் பெயார் காரணமாக எளிதாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டாலும், குறிப்பிடும் படியாக சமித் டிராவிட் இதுவரை பெரியளவில் செயல்படவில்லை. ஆல்ரவுண்டரான சமித் டிராவிட் பவுலிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. இருந்தாலும் அனைத்து அணிகளிலும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். மகாராஜா டிராபியில் சில நல்ல ஷாட்ஸை விளையாடி இருந்தாலும், இந்திய யு19 அணிக்கு தேர்வாகுவதற்கான திறமை சமித் டிராவிட்டிடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ நிர்வாகத்தைத் தொடர்ந்து இந்திய அணியிலும் வாரிசு அரசியல் தொடங்கிவிட்டதா என்ற குழப்பமும் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.