காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டப்படும் என பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் இன்று டில்லியில் பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையின் சூழல் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சந்திப்பின் போது, பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.
பஹல்காம் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க இருக்கிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சர்கள், தங்களிடம் அணுகுண்டுகள் இருப்பதாகவும், யாருக்கும் அடிபணியமாட்டோம் என்றும் பேசி வருகிறார்கள். காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில், பாகிஸ்தான் எல்லையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே பதுங்கு குழிகள் தயார்படுத்தி வருகிறார்கள். காஷ்மீர், பஞ்சாப் மாநிலத்தில் போர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எல்லையோர மாநிலங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இந்திய எல்லையோரம் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள், தாங்கள் பயிர் செய்த உணவு தானியங்களை 48 மணி நேரத்தில் அறுவடை செய்து விடும்படி பாகிஸ்தான் கூறியது. அந்த வயல்களில்தான் பாகிஸ்தான் பதுங்கு குழி அமைத்து வருகிறது. எனவே இரு நாடுகளின் எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.