இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை.இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.
கடைசியாக இந்த இரு அணிகளும் சமீபத்தில் டி20 உலககோப்பை போட்டியில் மோதின. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர். இது அந்த மைதானத்தில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் இந்த நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி ) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்காக ஆர்வம் காட்டி , சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது.
இது குறித்து அதன் தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் பாக்ஸ் கூறியதாவது ; 3 டெஸ்ட் போட்டிகள் நடந்தால் சிறப்பாக இருக்கும் .நாங்கள் அதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் எடுத்துக்கொண்டோம். மிகவும் பிஸியான கால அட்டவணையில், நான் புரிந்து கொள்ளக்கூடியவற்றிலிருந்து இது மிகவும் சிக்கலானது. அதனால் இது பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியா இதை ஐசிசியிடம் முன்வைக்கும் என்று நம்புகிறேன். உலகெங்கிலும் உள்ள சில மைதானங்கள் ரசிகர்கள் இல்லாமல் இருப்பதை பார்க்கும்போது, மைதானதில் ரசிகர்கள் நிரம்பி விளையாட்டைக் கொண்டாடுவதும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் மெல்போர்னில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியை போன்ற சூழலை நான் உணர்ந்ததில்லை. ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் வந்த சத்தம் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது, குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் அனைவரும் போட்டியை மிகவும் ரசித்தனர். என கூறினார்.