வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட்டு, மத்தியில் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுவரை இந்த கூட்டணி சார்பில் 3 கூட்டங்கள் நடத்தப்பட்டது.
4வது கூட்டம் வரும் 19ம் தேதி மாலை 3 மணிக்கு டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடக்கிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தின்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும், பாஜகவை மக்களவை தேர்தலில் வீழ்த்துவதற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.