வெஸ்ட் இண்டீசில் ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று கயானாவில் நடந்த அரையிறுதியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஒரு மணி நேரம், 20 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஆரம்பத்திலேயே கோலி (9) மற்றும் ரிஷாப் (4) இருவரும் ஏமாற்றம் தந்தனர். இந்திய அணி 8 ஓவரில் 65/2 ரன் எடுத்த போது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம், 17 தாமதமாக மீண்டும் ஆட்டம் துவங்கியது. கர்ரான் வீசிய 13வது ஓவரில் சிக்சர் அடித்த ரோகித், அரைசதம் கடந்தார். இதே ஓவரில் சூர்யகுமார், ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, 19 ரன் கிடைத்தன. ரஷித் சுழலில், ரோகித் (57) போல்டானார். சூர்யகுமார், 47 ரன் எடுத்து வீழ்ந்தார். ஆர்ச்சர் 18 வது ஓவரை வீசினார். இதன் முதல் 3 பந்தில் 2, 6, 6 என 14 ரன் எடுத்த பாண்ட்யா (23), 4வது பந்தில் அவுட்டானார். 5வது பந்தில் துபே ‘டக்’ அவுட்டானார். அக்சர் படேல் 10 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது. ஜடேஜா (17), அர்ஷ்தீப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணிக்கு பட்லர், பில் சால்ட் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. அக்சர் தனது முதல் ஓவரில் பட்லரை (23) அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவை (0) போல்டாக்கிய அக்சர், மொயீன் அலியையும் (8) விட்டுவைக்கவில்லை. கர்ரான் (2), அபாயகரமான ஹாரி புரூக் (25) என இருவரையும் குல்தீப் வெளியேற்றினார். ஜோர்டான் (1), ரஷித் (2) என இருவரும் ரன் அவுட்டாகினர். கடைசியில் ஆர்ச்சர் (21) அவுட்டாக, இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் 103 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 68 ரன்னில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. கடந்த 2022, ‘டி-20’ உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா (168/6), 10 விக்கெட்டில் இங்கிலாந்திடம் (170/0) தோற்றது. நேற்றைய அரையிறுதியில் 68 ரன்னில் வெற்றி பெற்று, பதிலடி கொடுத்தது. ‘டி-20’ உலக கோப்பை பைனல் நாளை பார்படாசில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன…