Skip to content

சாம்பியன்ஸ் டிராபி.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ரோஹித் 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்து அவர் சாதனை படைத்தார். 261 இன்னிங்ஸ் ஆடி இந்த ரன்களை அவர் எடுத்துள்ளார். தொடர்ந்து வந்த கோலி 22 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்கள், அக்சர் படேல் 8 ரன்கள் எடுத்து வெளியேறினர். மிடில் ஓவர்களில் இந்தியா விக்கெட்டை இழந்து தடுமாறிய சூழலில் கே.எல்.ராகுல் பேட் செய்ய வந்தார். ஆட்டத்தின் சூழலை அறிந்த அவர், கில் உடன் சேர்ந்து கூட்டணி அமைத்து இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் தனது 8-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 129 பந்துகளில் 101 ரன் எடுத்திருந்தார். ராகுல், 47 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் 2, தஸ்கின் மற்றும் முஸ்தாபிசுர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். முன்னதாக, முதல் இன்னிங்ஸில் 8.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம். சவுமியா சர்க்கார், கேப்டன் நஸ்முல் ஹொசைன் ஷான்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர் அக்சர் படேல் வீசிய 9-வது ஓவரில் தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். அடுத்த பந்தில் ஜாக்கர் அலி பேட்டில் பட்டு பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப் ஃபீல்டராக நின்ற கேப்டன் ரோஹித் வசம் சென்றது. அதை கேட்ச் பிடித்திருந்தால் அக்சர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருப்பார். அதை ரோஹித் மிஸ் செய்தார். கிட்டத்தட்ட ஆட்டத்தின் திருப்புமுனை என்றும் அதை சொல்லலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜாக்கர் அலி, தவ்ஹித் ஹ்ரிடோய் உடன் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 43-வது ஓவரில் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஜாக்கர் அலி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது ஆகியோர் விரைந்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த தவ்ஹித் ஹ்ரிடோய் சதம் விளாசினார். அவர் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.

error: Content is protected !!