இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. ஜோகனஸ்பர்க்கில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் வரிசையாக வீழ்த்தினர்.
வெறும் 27.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்கள் அடித்தார். இதையடுத்து 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ருத்ராஜ் கெயிக்வாட் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஸ்ரேயஸ் அய்யர், தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். ஸ்ரேயஸ் 52 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இந்தியா 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. சாய் சுதர்சன் அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.