வங்கதேச நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 2க்கு 1 என்ற கணக்கில் வங்கதேச அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் சிறப்பாக விளையாடியது. இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று தொடர்ந்து ஆடிய அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஒருவர் கூட 30 ரன்னை தாண்டவில்லை. வங்கதேச அணி சார்பில் அதிகப்பட்சமாக முஷ்பீர் ரகுமான் 28 ரன்கள் எடுததார். சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.