தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. 23 கி.மீ நீளமுள்ள புதிய ராமர் சேது பாலம், இந்தியாவின் தனுஷ்கோடியை இலங்கையின் பாக் ஜலசந்தி வழியாக இணைக்கும் சேதுசமுத்திரம் திட்டம், போக்குவரத்துச் செலவை 50 சதவீதம் குறைத்து, இலங்கைத் தீவை இணைக்க உதவும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்தபோது பாலம் அமைப்பதற்கான ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் (MEA) இது தொடர்பாக மற்ற அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.