பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வந்தார். பின்னர் 2022-ல் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்.
பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவர் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார். மேலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காங்கிரஸ் உடன் தொகுதி உடன்பாடு கிடையாது என அறிவித்துள்ளது. இதுவும் நிதிஷ் குமாரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே பீகார் மாநில முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்த நிலையில், மத்திய அரசை பாராட்டியதுடன் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் நிதிஷ் குமார். லாலுவின் இளைய மகன் துணை முதல்வராக உள்ளார். மற்றொருவர் மந்திரியாக உள்ளார். ஒரு மகள் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இதனால் இவர்களை குறிவைத்துதான் நிதிஷ் குமார் பேசினார் என செய்தி வெளியானது. வெளிநாட்டில் வசித்து வரும் லாலுவின் மகள் இதனால் கோபம் அடைந்து நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்ப அந்த கருத்துகளை நீக்கினார். இது எல்லாம்தான் நிதிஷ் குமாரை கூட்டணி மாற வைக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் நிதிஷ் குமாரை வரவேற்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் தலைவர்கள் அவரை வரவேற்க தயாராக இல்லை. கூட்டணியில் இணைத்தாலும் முதல்வர பதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கூட்டணியில் இணைத்து மத்திய மந்திரி பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர முடிவு செய்தால், வருகிற 4-ந்தேதி பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் உள்ள பெட்டியாஹ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் ஒரே மேடையில் தோன்றலாம் எனத் தெரிகிறது.
ஏற்கனவே பாஜக கூட்டணியில் ஆட்சியை பிடித்த நிதிஷ், பின்னர் பாஜகவை கழற்றிவிட்டு விட்டு லாலு பிரசாத் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார். இப்போது மீண்டும் பாஜக பக்கம் தாவ தயாராகி விட்டார். அதே நேரத்தில் இந்தியா கூட்டணியை உடைக்க இவரை இழுத்து விட பாஜக மேலிடம் தயாராக உள்ளது. அதே நேரத்தில் பீகார் மாநில பாஜகவினர் நிதிஷ்குமாரை ஏற்க தயாராக இல்லை. இவர் 5 வருடத்துக்கு எங்கும் தாவ மாட்டார் என்ற உத்தரவாதம் கொடுத்தால் சேர்க்கலாம் என்று பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.