Skip to content
Home » இண்டி கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுது..

இண்டி கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுது..

  • by Authour

இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கின. திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இடம்பெற்றன. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் இண்டி கூட்டணி அமர்ந்தது. அடுத்து நடந்த ஜம்மு – காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலிலும் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், இண்டி கூட்டணி பெரும் தோல்வியடைந்து, எதிர்க்கட்சி வரிசையில் கூட இடம்பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதால், அக்கட்சியின் எம்.பி., ராகுல் காந்தி இண்டி கூட்டணியின் தலைவராக இருந்துவருகிறார். இந்த சூழலில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி  ‘நான் இண்டி கூட்டணியை உருவாக்கினேன். ஆனால், அவர்களால் அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதை பார்க்க விரும்புகிறேன். ஆனால், அவர்கள் என்னை பொருட்படுத்தவில்லை. நான், அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் சிறந்த உறவை பேணி வருகிறேன். வாய்ப்பு கிடைத்தால், இண்டி கூட்டணியின் சுமுகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். அந்த கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார். மேற்கு வங்கத்தின் வெளியே செல்ல நான் விரும்பவில்லை; ஆனால், இங்கிருந்தபடியே கூட்டணியை இயக்க முடியும்’ என, தெரிவித்திருந்தார். மம்தாவின் இந்த கருத்து, இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. . சமாஜ்வாதி கட்சி, மம்தாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அடுத்தகட்டமாக மகாராஷ்டிராவின் தேசியவாத காங்., கட்சியின் எம்பியும் சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே ‘எதிர்க்கட்சி கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக பொறுப்பு உள்ளது. இந்த கூட்டணியில் திரிணமுல் தலைவர் மம்தா, முக்கியமான பொறுப்பை ஏற்க முன்வந்தால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம்’  என பேசியுள்ளார். இப்படியாக இண்டி கூட்டணியின் தலைவராக யார்? செயல்படுவது தொடர்பாக அக்கூட்டணியில் சலசலப்பு உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *