இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்டில் வென்ற நியூசிலாந்து, தொடரை கைப்பற்றியது.மூன்றாவது டெஸ்ட் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து 143 ரன் முன்னிலை பெற்று இருந்தது.
3வது நாள் ஆட்டத்தை இன்று துவக்கிய அந்த அணி கூடுதலாக 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அஜாஸ் படேல் 8 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் ஆகாஷ் தீப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 174 ரன்னுக்கு முடிவுக்கு வந்தது. ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 147 ரன் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஆனால், அஜாஸ் படேலின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஜெயிஸ்வால் 5, ரோகித் சர்மா 11, சுப்மன் கில் 1, விராட் கோஹ்லி 1, சர்பராஸ் கான் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினர். ஜடேஜாவும் 6 ரன்னில் அவுட்டானார்கள். மறுபுறம் ரிஷப் பன்ட் நிதானமாக விளையாடி 64 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களில் அவுட்டானார். அஸ்வின் 8, ஆகாஷ் ரன் எடுக்காமல் அவுட்டாக இந்திய அணி 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய அஜாஸ் படேல் 6 விக்கெட்களை சாய்த்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.