உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 4லும் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. அதேபோல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த போட்டி தரம்சாலா மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே தரம்சாலா மைதானத்தில் ஆடிய அணிகள், அவுட் ஃபீல்டை காட்டமாக விமர்சித்தனர். தரம்சாலா மைதானத்தை பொறுத்தவரை, பேட்டிற்கிற்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் கொஞ்சம் உதவியாக இருக்கும். அதேபோல் டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீசவே முடிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் மலைகள் சூழ மைதானம் இருப்பதால், இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் தரம்சாலா மைதானத்தில் தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 43 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக விளையாடப்பட்டது. இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை தகவல் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியா – நியூசிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய ஆட்டமும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியாக விளையாடப்படும் என்று பார்க்கப்படுகிறது. இந்த உலககோப்பை தொடரில் இரு அணிகளும் தோல்வியை சந்திக்கவில்லை என்பதால் வெற்றி என்பதனை விட முதல் தோல்வி யாருக்கு? என்பது தான் இன்றைய சுவாரசியம்..