தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி நான்கு போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. நேற்று நான்காவது, கடைசி போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இத்தொடரில் முதன் முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சிபம்லா பந்தில், அபிஷேக் (36 ரன், 18 பந்து) அவுட்டானார். இந்திய அணி ‘பவர்பிளே’ ஓவர் (6) முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 73 ரன் எடுத்தது. சாம்சனுடன் இணைந்தார் திலக் வர்மா. மஹாராஜ் வீசிய 9 வது ஓவரில், திலக் வர்மா அடுத்தடுத்து சிக்சர் அடித்து மிரட்டினார். இந்திய அணி 8.3 ஓவரில் 100/1 ரன்களை எட்டியது. ஸ்டப்ஸ் வீசிய 10 வது ஓவரின் முதல் இரு பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார் சாம்சன். இதே ஓவரில் திலக் வர்மா, இரண்டு பவுண்டரி அடிக்க, 21 ரன் எடுக்கப்பட்டன. திலக் வர்மா, மார்க்ரம் வீசிய 14வது ஓவரின் கடைசி 4 பந்தில், 4, 6, 6, 4 என ரன் மழை பொழிந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 14.1 வது ஓவரில் 200/1 ரன்களை எட்டியது. சாம்சன், 3வது சதம் எட்டினார். திலக் வர்மா 41வது பந்தில் சதம் கடந்தார். இந்திய அணி 20 ஓவரில் 283/1 ரன் குவித்தது. திலக் வர்மா (120), சாம்சன் (109) அவுட்டாகாமல் இருந்தனர். கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணி, அர்ஷ்தீப் சிங் ‘வேகத்தில்’ அதிர்ந்தது. ஹென்ரிக்ஸ், கிளாசன் ‘டக்’ அவுட்டாக, மார்க்ரம் 8 ரன்னில் திரும்பினார். பாண்ட்யா பந்தில் ரிக்கிள்டன் (1) சிக்கினார். தென் ஆப்ரிக்க அணி 10 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த மில்லர், ஸ்டப்ஸ் போராடினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது, வருண் சக்ரவர்த்தி சுழலில் மில்லர் (36) வெளியேறினார். மறுபக்கம் ஸ்டப்ஸ் (43), பிஷ்னோய் பந்தில் வீழ்ந்தார். சிம்லேன் (2), கோயட்சீ (12) நிலைக்கவில்லை. கடைசியில் சிபம்லா (3) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 18.2 ஓவரில் 148 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 135 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய சார்பில் அர்ஷ்தீப் 3, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் சாய்த்தனர். சர்வதேச ‘டி-20’ல் ஒரே ஆண்டில் 3 சதம் அடித்த முதல் வீரர் ஆனார் இந்தியாவின் சாம்சன். சர்வதேச ‘டி-20’ல் அடுத்தடுத்த போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் இந்தியாவின் திலக் வர்மா. முன்னதாக கஸ்தவ் (பிரான்ஸ்), ரூசோவ் (தெ.ஆப்.,), பில் சால்ட் (இங்கிலாந்து), சாம்சன் (இந்தியா) இதுபோல சதம் அடித்துள்ளனர். சர்வதேச ‘டி-20’ல் குறைந்த ஓவரில் 200 ரன் எடுத்த அணி வரிசையில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்தது. நேற்று 14.1 ஓவரில் 200/1 ரன் எடுத்தது. இதில் தென் ஆப்ரிக்கா (13.5 ஓவர், எதிர்-வெ.இண்டீஸ், 2023) முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே இந்திய அணி 13.6 ஓவரில் 200 ரன் (எதிர்-வங்கதேசம், 2024) எடுத்தது இரண்டாவதாக உள்ளது.