Skip to content
Home » கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் முழுவதுமாக அந்த அணி இழந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டி சனிக்கிழமை (அக்.12) ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா முதலில்  பேட்டிங் செய்தது. ஓப்பனர்களாக சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். 2-வது ஓவரில் தொடர்ந்து 4 போர்கள் அடித்து வெளுத்து வாங்கினார் சஞ்சு சாம்சன். மறுபுறம் இருந்த அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிக்சர்களாக பறக்கவிட்டு அசத்தினார். இதனால் இந்திய அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 82 ரன்களைச் சேர்த்தது. இதுதான் டி20 போட்டிகளில் பவர் பிளேவில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர். இருவரும் வங்கதேச அணியின் பந்துகளை அடித்து துவம்சம் செய்ய 22 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். இது சஞ்சு சாம்சனின் அதிவேக அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. 10-வது ஓவரில் மட்டும் 5 சிக்சர்களை விளாசி தள்ளினர் சஞ்சு சாம்சன். ரிஷாத் ஹூசைன் வீசிய அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களைச் சேர்த்தார் சஞ்சு. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களைச் சேர்த்தது. மறுபுறம் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய 14-வது ஓவரில் 111 ரன்களுக்கு விக்கெட்டானார் சஞ்சு சாம்சன். 47 பந்துகளில் 8 சிக்சர்களை விளாசிய சஞ்சு சாம்சனுக்கு இது சிறப்பான இன்னிங்ஸ். அவரைத் தொடர்ந்து 5 சிக்சர்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ் 75 ரன்களில் கிளம்பினார். 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 252 ரன்களைச் சேர்த்தது. 4 சிக்சர்களை விளாசிய ரியான் பராக் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 18 பந்துகளில் 47 ரன்களைச் சேர்த்து சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதமின்றி அவுட்டாகி களத்திலிருந்து கிளம்பினார். அவரைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ரெட்டி டக் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய 297 ரன்களை குவித்தது. ரிங்கு சிங் 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் தன்ஜிப் ஹசன் சகீப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹமது, முஸ்தஃபிசுர் ரஹ்மான், மஹ்மதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. தவ்ஹித் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது அந்த அணி. இதன் மூலம் இந்தியா 133 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3, மயங்க் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சனும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும் வென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!