எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி அமைத்து உள்ளதால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் இந்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகளை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிபிஐ, ஐடி, ஈடி என அனைத்து துறைகளையும் எதிர்க்கட்சிகள் மீது மத்திய அரசு ஏவி வருகிறது. வழக்கத்தை விட இப்போது இந்த ரெய்டுகள் அதிகரித்து உள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பண உதவிகள் வரும் வழிகள் அனைத்தையும் முடக்கி விட வேண்டும் என்ற ஒரு அம்ச திட்டத்துடன் இப்போது மத்திய அரசின் 3 துறைகளும் செயல்படத்தொடங்கி விட்டது. தமிழகத்தில் திமுக நிர்வாகிகளை முடக்கி வழக்குகளில் சேர்த்து அவர்களை தேர்தல் பணி செய்யவிடாமல் தடுப்பது முதல் திட்டம்.
இதற்காக ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி அவரை கைது செய்தது. அடுத்ததாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி அவரிடம் விசாரணை நடத்தியது.
கடந்த வாரம் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
திருவண்ணாமலை, சென்னையில் உள்ள அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சிறுதுறைமுகங்கள் துறை ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரில் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீடு, மற்றும் கோவை திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமாரின் வீடு ஆகிய இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. கரூரில் மட்டும் 4 இடங்களிலும் கோவையில் 3 இடங்களிலும் ஐடி ரெய்டு நடக்கிறது. தமிழகத்தில் எ.வ. வேலு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையும் எ.வ. வேலு மீது விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.
இதற்கு அடுத்ததாக இன்னும் சில மூத்த அமைச்சர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்த ஐடி, அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம். இன்னும் 3 மாதத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தி திமுகவினரை தேர்தல் பணி செய்யவிடாமல் முடக்க வேண்டும் என்ற திட்டத்தில் மத்திய அரசின் 3 துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.