கரூர் வருமான வரித்துறை சார்பாக கரூர் மாவட்டத்தில் வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம் கரூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர் கே.ஆர்.கருப்பசாமி பாண்டியன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
கடந்த ஆண்டில் தேசிய அளவிலான நேரடி வரி வசூல் வளர்ச்சி விகிதம் 18% ஆகும். ஆனால் கடந்த ஆண்டில் திருச்சி, கரூர்,பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மதுரை பிராந்தியத்தின் நேரடி வரி வசூல் 0.98 சதவீதம் மட்டுமே ஆகும். இது மிகவும் குறைவாக உள்ளது. எனவே வரிசெலுத்துவோர் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு உரிய வரியினை செலுத்த முன் வரவேண்டும் .
ADVANCE TAX எனப்படும் முன்கூட்டியே செலுத்தப்படும் வரியினை ஆண்டுக்கு நான்கு தவணைகளில் கட்டவேண்டும். முதல் தவணை ஜூன் 15-ம் தேதிக்குள்ளும் மீதமுள்ள தவணைகளை முறையே SEPTERMBER 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 தேதிக்குள் கட்டவேண்டும்.
ADVANCE TAX தாமதமாக செலுத்த நேரிட்டால் வட்டி மற்றும் அபராதம் செலுத்த நேரிடும். ஆகவே வரும் ஜூன் 15 முதல் தவணை 15 சதவீதத்தை கட்டாயம் செலுத்த வேண்டும்.
திருச்சி சரகத்திற்குட்பட்ட மொத்தமுள்ள நிரந்தர கணக்கு எண்கள் 30.74 லட்சமாகும். இதில் 3.09 லட்சம் நபர்கள் மட்டுமே வருமான வரி படிவம் தாக்கல் செய்கின்றார்கள். இது 10 % சதவீதம் மட்டுமே ஆகும்.
அப்படி தாக்கல் செய்யும் படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீதம் படிவங்கள் வரிசெலுத்துவோர் மீதுள்ள நம்பிக்கையில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே வரிசெலுத்துவோர் இதனை கவனத்தில் கொண்டு படிவங்களை அதிக அளவில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுக்கான வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 31 ஆகும்.
வருமான வரிப் படிவம் காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அபராத தொகை செலுத்த நேரிடும் . வருமான வரி அதிகாரி முத்துகிருஷ்ணன் காணொலி (ppt) மூலம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ள சேவைகள் மற்றும் வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். மேலும் CHAMBER OF COMMERCE செயலாளர் வெங்கட்ராமன் விழிப்புணர்வு கூட்டத்தில் கூறப்பட்ட விளக்கங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.