அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மை குரு புரோச் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலயத்தை திறந்து வைத்து கூட்டு திருப்பலி நடத்தினர். ஆலயத்திற்கு ஜெயங்கொண்டம் அன்னை அசோசியேட் உரிமையாளரும், பொறியாளருமான மார்ட்டீன் என்பவர் வழங்கிய தங்கத்தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு புனித நீர் தெளித்து பொதுமக்களின் பிரார்த்தனைக்கு வழங்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட ஆலயத்தில் குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆலய கட்டுமானத்திற்கு பல்வேறு வகையில் பண உதவி பொருள் உதவி மற்றும் பணி செய்த அனைத்து தரப்பினர் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி சொல்லி, நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இதன் பின்னர் மாணவர்களின் நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.