Skip to content
Home » தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

  • by Authour

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் தேனி, கம்பம், குமுளி உட்பட ஒரு சில பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூண்டு மருந்தாகவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பூண்டில் அதிகப்படியான வைட்டமின் சத்துகளும், தாதுக்களும் இருக்கின்றன. மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதியில் பூண்டு சாகுபடியில் அதிக மகசூல் பெற்றுள்ளது. இதனால் தஞ்சை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டிற்கும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக நாட்டு பூண்டு ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டுப் பூண்டின் விலை அதிகம் இருப்பதால் பொதுமக்கள் மலைப்பூண்டை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ மலை பூண்டு ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த மாதம் மலை பூண்டின் விலை அதிகமாக காணப்பட்டது. இதனால் பூண்டு வாங்குவதற்கே மக்கள் அச்சப்பட்டதுடன், குறைவாகவே வாங்கி சென்றனர். தற்போது நாங்கள் தேனி ,கம்பம், குமுளி போன்ற பகுதிகளிலிருந்து மலை பூண்டை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். நாட்டு பூண்டின் விலை அதிகம் இருப்பதால் கடைக்காரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் எங்களிடம் மலைப்பூண்டு வாங்கி செல்கின்றனர். மேலும் சில்லறை கடைக்காரர்களும் பூண்டு விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், நாட்டுப்பூண்டும் சரி, மலைப்பூண்டும் சரி தற்போது அதிக விலையில்தான் விற்கப்படுகிறது இருந்தாலும் நாட்டுப்பூண்டை விட மலைப்பூண்டு விலை குறைவாக உள்ளது. பூண்டு உணவில் சுவையும், மணமும் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி பூண்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதால் சளி, இருமல் காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துதல் ஆகிய பல காரணங்களுக்காகவும் பலவகையான உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. அதனால் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி செல்கிறோம் என்றனர்.