குஜராத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கள் பழைய காருக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்ரிலி மாவட்டம் பதுர்ஷிங்கா கிராமத்தை சேர்ந்த சஞ்சய் போல்ரா என்பவர் 12 ஆண்டுகள் பழமையான கார் ஒன்றை வைத்திருந்தார். அந்த காரை அதிர்ஷ்டமாக எண்ணி அதை பொக்கிஷமாக வைத்து அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். எனினும் கார் பழையதாகிவிட்டதால் அதை பயன்படுத்த முடியாமல் போனது.
இந்நிலையில் அந்த காருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக உயிரிழந்தவர்களுக்கு செய்வது போல் இறுதி சடங்குகளை போல்ரா குடும்பத்தினர் செய்துள்ளனர். இந்து முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த கார் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது. இறுதி சடங்குகளுக்காக 4 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் அதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ள போல்ரா கார் புதைக்கப்பட்ட இடத்தில் அதன் நினைவாக மரக்கன்றை நட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.