கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த அணையில் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், எப்போதும் இங்கு பல வருடங்களாக மீன்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்களும் அவர்களைச் சார்ந்து 500 தொழிலாளர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி துவங்கி மாலை 6 மணி வரை மீன்கள் பிடித்து உடனடியாக அங்கேயே விற்பனை நடைபெறும்.
இதனிடையே காவிரி ஆற்றில் வெள்ளக் காலம் ஏற்படும்போது உபரியாக கடலுக்குச் செல்லும் நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு செல்ல காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துவக்கி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளின் தொடர்ச்சியாக தற்போது மாயனூர் கதவணை அருகே நடைபெறுவதால், அங்கே மீன்பிடித்து வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் மீனவர்களை அப்பகுதியில் தொழில் செய்யக்கூடாது என பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 2000 பேர் கடந்த மூன்று நாட்களாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீனவர்கள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மீனவர்களின் பிரதிநிதி ராம் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கும்போது, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உயிருடன் பிடித்த மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது அதிகாரிகள் பணியை நிறுத்தச் சொன்னால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு நாங்கள் மீண்டும் அதே இடத்தில் தொழில் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இங்கு விற்கப்படும் மீன்கள் கரூர் மட்டுமல்லாது, மோகனூர்,நாமக்கல்,திண்டுக்கல்,திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை வாங்கி செல்லும் நிலையில் தற்பொழுது மீன் கடைகள் நடத்தக்கூடாது என என தெரிவித்த நிலையில் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது புகார் தெரிவித்தனர்.