கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (41), டாரஸ் லாரி உரிமையாளர். இவரது, டாரஸ் லாரியை டிரைவர் பழனிசாமி, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சி மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளரான ராஜா (42) கார்த்திகேயன் (37) உள்பட ஆறு பேர் டூவீலரில் சென்று டாரஸ் லாரியை வழிமறித்து நிறுத்தினர். பிறகு, டாரஸ் உரிமையாளர் சேகரை வர வழைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிதியாக, 30 ஆயிரம் ரூபாயை, ராஜா உள்ளிட்டவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், டாரஸ் லாரி உரிமையாளர் சேகர் 4,000 ரூபாயை ஜி-பே மூலம் அனுப்பியுள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த ராஜா உள்ளிட்டவர்கள், டாரஸ் லாரி உரிமையாளர் சேகரை, தகாத வார்த்தை பேசி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, சேகர் அளித்த புகாரின்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளராக இருந்த ராஜா உள்பட ஆறு பேர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், இவர் குறித்து பலமுறை புகார் தலைமைக்கு சென்றுள்ள நிலையில், பலமுறை கண்டித்து அறிவுரை வழங்கி உள்ளனர். தற்போது மீண்டும் புகாரை தொடர்ந்து ராஜாவை மூன்று மாத காலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சி நிறுவன தலைவர் திருமாவளவன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விசிக முன்னாள் நிர்வாகி ராஜாவை வெள்ளியணை போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.