: பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையே, பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவதும், தமது வீட்டுக்கு வரும்படி அந்தப் பெண்ணை இம்ரான்கான் வற்புறுத்துவது போன்ற ஆடியோ பதிவை பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் இம்ரான்கானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆடியோ விவகாரம் குறித்து, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் கூறுகையில், எங்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ஒரு பெண்ணுடன் போனில் ஆபாசமாக பேசுவது போல வெளியிடப்பட்டுள்ள ஆடியோ போலியானது. அவரைப் போலவே குரலை பயன்படுத்தி விஷமத்தனம் செய்துள்ளனர். இது அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக தற்போதைய அரசு ஒத்துழைப்புடன் பரப்பி விடப்படுகிறது என தெரிவித்தார்.