பாகிஸ்தான் பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கானை, கட்சி நிதி விவரங்களை மறைந்ததாக அவரை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தது. இதனால் பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்தார். இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து இம்ரான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் இம்ரானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டுமென இம்ரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்க மறுத்து நீதிபதி ராஜா ஜாவத் அப்பாஸ், ‘‘போராட்டத்தின் போது துப்பாக்கி சுட்டால் குண்டடி பட்டதற்காக இம்ரான் கான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் உள்ளார். எனவே இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடியாது. நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டார். எனவே, இம்ரான் கான் விரைவில் கைதாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.