நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர், பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைகளுக்காக தன் வாழ்நாள் வரை போராடியவர்,1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சிறை சென்றவர், ராஜாஜி முதல்வராக இருந்த பொழுது குலக்கல்வி திட்டம் கொண்டு வந்ததை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியவர், நில உடமைக்கு ஆதிக்கத்துக்கு எதிராக, இரட்டைக்குவளை முறையை ஒழித்திட, சுயமரியாதைக்காக போராடிய ஒப்பற்ற தலைவர் இமானுவேல் சேகரனார் 67 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல்ஆப்தீன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர துணைச் செயலாளர் கே.மூர்த்தி, ஆதித்தமிழர் பேரவை மாநிலத் துணைத் தலைவர் எம்.பி.நாத்திகன், மாவட்ட செயலாளர் சிவா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் என்.சாமிநாதன், நிர்வாகி ஏ.மணிகண்டன், அரசு போக்குவரத்து சங்க ஏஐடியூசி பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், நிர்வாகி பி. முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் நாடு விடுதலை பெற்ற பிறகும், வளர்ந்து வரும் வேகமான விஞ்ஞான உலகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்னமும் நடந்து வருவதற்கு முடிவு கட்டவும், மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் ஆண்டான்அடிமை முறை மனுதர்ம-சனாதன கொள்கைகளுக்கு எதிரான உறுதியான,ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம், சாதி ஒழிந்த சோசலிச தமிழ்நாடு படைத்திட ஒன்றிணைவோம் என்று நிகழ்வில் உறுதி ஏற்கப்பட்டது