சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்ற பெண் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். 6 மாதமாக சிகிச்சை பெற்றும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரேமாவின் மகன் விக்னேஷ், பிரேமாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பாலாஜியை கத்தியால் சரமாரி குத்தினார். இதில் அவருக்கு 7 இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விக்னேசை போலீசார் கைது செய்தனர்.
டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.