பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய மகன்களும் மற்றும் பவதாரணி மகளும் உள்ளனர். மகள் பவதாரணி பாடகியாவார். கடந்த சில மாதங்களாக 46 வயதான பவதாரணி புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தநிலையில் ஆயுர்வேத சிகிச்சை பெற பவதாரணி இலங்கை சென்றிருந்தார். அவரை பார்க்க இளையராஜா நேற்று இலங்கை சென்றார். இந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் பவதாரணி காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் நாளை காலை சென்னை கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக இளையராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. பவதாரணி பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல’ பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது…