இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
“எங்கிருந்து இந்தக் கதையை ஆரம்பிப்பது என தெரியவில்லை. ஒரு நிகழ்வில் தான் முதல் முதலில் பார்த்தேன். அதில் இளையராஜா என அழைத்தபோது இவர் எழாமல் அமர்ந்திருக்கிறார். வேறு யாரோ நடந்து வந்தார்கள். அப்படித்தான் ஆரம்பித்தது.
பின்னர், உங்களின் இசைக்கு ரசிகன் என தொடங்கி, அண்ணே, ஐயா என பல பரிணாமங்களை கடந்துவிட்டது. இளையராஜா, குணாவுக்கும் அபிராமிக்கும் காதல் பாடல் போட்டு கொடுத்திருக்கிறார் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை, அது எங்களுடைய காதல் பாட்டு. என் கண்மணிக்கு நான் எழுதிய கடிதம். அதுக்கு அவர் இசையமைத்தார்.
இந்த படத்தை 8 பாகங்கள் எடுக்கலாம். இளையராஜாவுக்கு பிடிக்காதவர்கள் எடுத்தால் அது தனிப் படம். ஆனால் எப்படியிருந்தாலும், இசைமேதை என்பவர் தனித்து நிற்பார். பிடிக்காதவர்களாக இருந்தாலும் இதை மறுக்க முடியாது. அவர் ஆறடியெல்லாம் இல்லை என்று பிடிக்காதவர்கள் சொல்வார்கள். ஆமாம். ஆனால் அவரின் ஒரு அடி பாடலைக் கேட்டால் போதும்!
உங்கள் பார்வையில் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற நிஜத்தை சொல்லுங்கள் என இயக்குநரிடம் கேட்டுக்கொள்கிறேன். அழுத்தம் எடுத்துக்கொள்ளாதீர்கள்”இவ்வாறு கமலஹாசன் பேசினார்.