கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. 1990ம் ஆண்டு இந்த முகாம் அமைக்கப்பட்டு இதில் 434 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு 60 நபர்களுக்கு வீடுகள் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் தற்காலிக வீடுகளை அவர்களே கட்டிக் கொண்டு வசித்து வருகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதால் வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. பழுதடைந்த வீடுகளை பராமரிப்பு செய்து தர வேண்டும், மழைநீர் முகாம் வழியாக சென்று தேங்க கூடிய நிலை இருப்பதால் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது அவற்றை சரி செய்து தர வேண்டும், முறையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டையை புதுப்பித்து தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனுவினை முகாமை சார்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துச் சென்றனர்.