இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாது தமிழக மீனவர்களின் விசைப்படகு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. அந்தவகையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு படகுகள் அங்கு மக்கி மண்ணாகி உள்ளது. இதையடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் காசோலை வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாகை, அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேருக்கு மொத்தம் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் மற்றும் மீனவர்கள் இதில் பலர் கலந்து கொண்டனர்.