தமிழ் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த அண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி 67.75 லட்சம் பேர். இவர்களில் 19 வயது முதல் 30 வயதில் உள்ளவர்கள் மட்டும் 28 லட்சம் பேர். தமிழ்நாட்டிலேயே வேலை தேடுவோர் இத்தனை லட்சம் என்றால் ஒட்டு மொத்த இந்தியாவில் வேலை தேடுவோர் எண்ணிக்கை பல கோடிகள் இருக்கும். இவர்களுக்கெல்லாம் அரசால் வேலை கொடுக்க வாய்ப்பில்லை.
எனவே தான் கல்லூரிகளில் படிக்கும்போதே மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்100 ஆண்டுகளை கடந்த திருச்சி ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரி, தங்கள் மாணவிகளை தொழில் முனைவோர்களாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லூரியில் தொழில்முனைவோருக்கான மையம் ஒன்றை(innovation incubation centre) தொடங்கி உள்ளனர்.
கல்லூரி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் 100 மாணவிகளை ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில் இரண்டாம் ஆண்டு , மூன்றாம் ஆண்டு மாணவிகளை தேர்வு செய்து இவர்களுக்கான தொழில் நுட்ப ஆலோசனைகள், சோதனைச்சாலை வசதிகள். பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கல்லூரி செய்து கொடுக்கிறது. 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடந்தது. இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வைத்தார். இதனை பயன்படுத்தி தற்போது வரை 60க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்தி உள்ளனர்.
இந்த ஐஐசி மையம் தொடக்கம் குறித்து கல்லூரி முதல்வர் அருட்சகோதரி கிறிஸ்டினா கூறும்போது, படிக்கும்போதே பெண்கள் தொழில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவது சிறப்பானது. இவர்களுக்கான அனைத்து உதவிகளையும் எங்கள் கல்லூரி செய்கிறது. இவர்களது முயற்சி வெற்றி பெறும். இதற்கு உதவி செய்த அனைவரும் நன்றி.நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் 100 பெண்கள் தொழில் முனைவோரை உருவாக்க உள்ளோம். இதன் மூலம் அவர்கள் மட்டுமல்ல நாடும் முன்னேறும் என்றார்.