ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்று வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்த பேட்டி… தனிப்படையின் முயற்சியால் 4 மணி நேரத்தில் 8 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர். கொலைக்கான முகாந்திரம் இருந்ததால் 8 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து உணவு டெலிவரி ஊழியர் உடைகள், 3 பைக்குகள், 7 அரிவாள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, ஆவணம், சிசிடிவி பதிவு அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். கைதானவர்கள் குற்றவாளிகள்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. பல சிசிடிவி காட்சிகளை பார்த்து உறுதிசெய்த பிறகே கைது செய்துள்ளோம். அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பதற்கு ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் சமர்ப்பிக்கலாம். தற்போது சந்தேகத்தின் பேரில் மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம். அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் நடந்துவிடுகிறது. ஆனாலும் குற்றத்தை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் சொல்லியே ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாக எதிராளிகள் நம்புகிறார்கள் இவ்வாறு அஸ்ரா கர்க் கூறினார். முன்னதாக ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் சரண் அடைந்த 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் எனவும் அதோடு நின்று விடாமல் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.