Skip to content

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால்….. தஞ்சை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்வது குறித்த கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் அஜீத், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மணவாளன், ரெங்கராஜ், வணிக நிறுவனங்களின் உரிமையாளார்கள், மீன்கடை உரிமையாளர்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் பேசும் போது, இனி வரும் காலங்களில் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அத்தோடு தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத இயக்க பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.