சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக, 2020 முதல் கிரெக் பார்கிலே (நியூசி.,) உள்ளார். இவரது 2வது கட்ட பதவிக்காலம், வரும் நவம்பர் மாதம் முடிகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியில் நீடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா, புதிய சேர்மனாக தேர்வாக உள்ளார். ஏற்கனவே, இவர், 2022 முதல் ஐ.சி.சி., நிதி, வர்த்தக பிரிவின் தலைவராக உள்ளார். தற்போது, ‘சேர்மன் பதவிக்கு ஜெய் ஷா மனு தாக்கல் செய்துள்ளதாக,’ ஐ.சி.சி., முறைப்படி நேற்று அறிக்கை வெளியிட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஜெய் ஷா ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். கடந்த 2019 முதல் பி.சி.சி.ஐ., செயலராக உள்ள ஜெய் ஷா, விரைவில் பதவி விலகுகிறார். இவருக்குப் பதில் புதிய செயலர், அக்டோபர் மாதம் நடக்கும் ஆண்டு பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட உள்ளார். டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹன் ஜெட்லி தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. ஐ.சி.சி.,யின் இளம் சேர்மன் ஆகிறார் ஜெய் ஷா. இவருக்கு 35 வயது தான். இவ்வளவு குறைந்த வயதில் ஐசிசி சேர்மனாக யாரும் பதவி வகித்தது இல்லை. இந்தியாவை பொருத்தவரை இதற்கு முன்னர் ஜக்மோகன் டால்மியா (1997-2000), சரத் பவார் (2010-12), சீனிவாசன் (2014-15), சஷாங்க் மனோகர் (2015-2020) என 4 பேர் இப்பதவியில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.