மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகனை சில நாட்களுக்கு முன் கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர். இது தொடர்பாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ‘டிஸ்மிஸ்’ போலீஸ்காரான தேனி மாவட்டம் போடியை சேர்ந்த செந்தில்குமார் (39), நெல்லை ரவுடி அப்துல்காதர்(42), தென்காசி மாவட்டம் சிவகிரி வைரமணி (36), காளிராஜன் (25), ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில் இந்த வழக்கில் விளாத்திகுளம் சூர்யா என்கிற பெண்ணிற்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. சூர்யா, குஜராத் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரின் மனைவி. இந்த சம்பவத்தை பொருத்தவரை மைதிலி ராஜலட்சுமிக்கும், சூர்யாவுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி வட்டிக்கு கடன் வாங்கிய சூர்யா, அதை செலுத்த முடியாமல் அவரது மதுரை சொத்துக்களை மைதிலி ராஜலட்சுமிக்கு ஈடாக எழுதிக்கொடுத்துள்ளார். இதனை மனதில் வைத்துக்கொண்டு மைதிலி ராஜலட்சுமியின் மகனை கடத்தி ரூ.2 கோடி பறிக்க சூர்யா திட்டமிட்டு இருந்ததாகவும் அதற்காக துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில்குமார் உள்ளிட்ட கூலிப்படையினரை அவர் அணுகியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது, இதையடுத்து வெளிமாநிலத்தில் பதுங்கியிருந்த மகாராஜா, சூர்யாவை கைது செய்ய மதுரை தனிப்படை போலீசார் தீவிரம் காட்டினர். இந்நிலையில் நேற்று காலை குஜராத் அகமதாபாத் கலெக்டர் குடியிருப்பில் சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்து தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக மதுரை போடிலைனைச் சேர்ந்த சூர்யாவின் தாய் உமா கூறினார். மேலும் இந்த தற்கொலைக்கு காரணம் மைதிலி ராஜலட்சுமி தான் என உமா புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் மதுரையில் சூர்யா தொழில் துவங்க முயற்சித்தார். அதற்காக தந்தை பாலுவிடம் சில சொத்துக்களை நன்கொடையாக எழுதிப் பெற்றார். அதன் மூலம் மைதிலி ராஜலட்சுமியின் கடனை கொடுத்தார். அதன்பிறகும் சூர்யாவை மைதிலி ராஜலட்சுமி ‘டார்ச்சர்’ செய்துள்ளார். அதன்பின் அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. படித்தவர் தானே எங்கு போனாலும் வந்து விடுவார் என இருந்தேன். ஆனால் நேற்று காலை குஜராத் அகமதாபாத் கலெக்டர் ரஞ்சித்குமார் பங்களாவில் இருந்து ‘உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவித்தனர். அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் ஹிந்தியில் பேசினர். எனக்கு புரியவில்லை. ‘கலெக்டர் மனைவியை போலீஸ் தேடுகிறது. கடன் வாங்கிய அவர் முன்னே பின்னே கொடுக்கலாம். அவரை கேவலப்படுத்தி விட்டாங்களே’ என மனமுடைந்து விட்டாளோ. அவருக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். சூர்யாவின் ஐ.ஏ.எஸ்., கணவர் அலைபேசியை எடுக்க மறுக்கிறார். நான் எப்படி குஜராத் செல்வேன் எனத் தெரியவில்லை. சூர்யா தற்கொலைக்கு மைதிலி ராஜலட்சுமிதான் காரணம் என்றார். இதையடுத்து மதுரை எஸ்.எஸ்.,காலனி போலீசில் உமா புகார் அளித்தார்.
மதுரை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்?
- by Authour
