அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில், 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த, தேர்விற்கு / பள்ளிக்குவராத அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி” திட்டம் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி துவக்கி வைத்தார்.
இம்முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கைகான ஆணையினை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:
நான் முதல்வன் உயர்வுக்குப் படி திட்டமானது தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் உன்னதமான ஒரு திட்டமாகும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பொருளாதார சூழலின் காரணமாகவோ, குடும்ப சூழல் காரணமாகவோ உயர்கல்வி சேராத மாணவர்களை கண்டறிந்து அச்சூழலை நீக்கி அவர்களை உயர்கல்வியில் சேர வைக்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். 12-ம் வகுப்பு தேர்ச்சிப் பெறாத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும். அவர்களையும் உயர்கல்வியில் சேர வைக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். மேலும், மாணவர்களின் விருப்பதிற்கேற்ப திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இம்முகாமில் கலந்துகொண்டுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர முடியாமல் ஏற்பட்டுள்ள தடைகள் தற்காலிகமானது. அத்தடைகளை தகர்த்து மாணவர்கள் உயர்கல்வி பயிலவேண்டும். கல்வியே சிறந்த முன்னேற்றத்திற்கான வழியாகும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உயர்கல்வி சேர்கை, கல்விக் கடனுதவிகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதுகுறித்த தகவல்கள் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு இவைகளை கடைபிடித்து உயர்கல்வி பயில வேண்டும். எனவே, மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வியில் சேர்ந்து கல்வி பயின்று, வாழ்கையில் நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி பேசினார்.
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு தகவல் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்யுமிடம், சான்றிதழ்கள் வழங்குவதற்கான இ-சேவை மையங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டார்.
இம்முகாமில் உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளைச் சேர்ந்த 247 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களில் 66 மாணவ, மாணவிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் உயர்கல்வி சேர்க்கைகாக விண்ணப்பித்துள்ளனர்.
இக்கூட்டத்தில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அரியலூர் ஷீஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்ரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குநர் செல்வம் முத்துசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.