மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது கட்டப்பஞ்சாயத்து, ஆட்கடத்தல்,கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படையை ஏவி கொலை செய்வதில் கைதேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கிலோக் கணக்கில் நகை அணிந்து கொண்டு வலம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் பல முறை சிறைக்குச் சென்ற ரவுடி வரிச்சியூர் செல்வம், பின்னர் திடீரென ரவுடியிசத்தை விட்டு மனம் திருந்தி வாழப்போவதாக காவல்துறையிடம் உறுதி மொழி கடிதம் வழங்கினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு தன்னை கைது செய்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்கை சந்தித்து ரவுடியிசத்தை கை விட்டு திருந்தி வாழ போவதாகவும், தான் இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன் என உறுதியளித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ரவுடி வரிச்சியூர் செல்வம் திடீரென காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.