Skip to content
Home » சூர்யாவைப்போல….360 டிகிரி கிரிக்கெட் வீரராக விரும்புகிறேன்… பாக் வீரர் பேட்டி

சூர்யாவைப்போல….360 டிகிரி கிரிக்கெட் வீரராக விரும்புகிறேன்… பாக் வீரர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன். இவரது அதிரடி ஆட்டத்தை பார்த்து இந்தியாவின் மிஸ்டர் 360 வீரர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்ற ஐசிசி விருதை சூர்யகுமார் வென்றுள்ளார். சூர்யகுமார் யாதவை மிஸ்டர் 360 என உலகம் முழுவதும் அழைக்கப்படும் ஏ பி டிவில்லியர்சே புகழந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் பல ஆட்டங்களில் தனி ஒருவராக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.  இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் நிலையை எட்டுவதற்கு நிறைய உழைப்பு தேவை எனவும், சூர்யாவுடன் ஒப்பிட விரும்பவில்லை, நான் 360 டிகிரி கிரிக்கெட் வீரராக பெயர் எடுக்க விரும்புகிறேன் எனவும் பாகிஸ்தானை சேர்ந்த இளம் வீரர் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இப்போதே எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை. ஏனெனில் சூர்யா 32 – 33 வயதில் இருக்கிறார். மறுபுறம் நான் வெறும் 22 வயது பையன். எனவே அந்த உச்சத்தை தொடுவதற்கு நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அதே வேளையில் சூர்யா தன்னுடைய அளவில் அசத்துகிறார். டி வில்லியர்ஸ் தனக்கென்று ஒரு அளவையும் தரத்தையும் கொண்டுள்ளார். அவர்களைப் போல நானும் 360 டிகிரி பேட்ஸ்மேன் என எனக்கென்று ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். அதனால் அவர்களின் பெயர்களை நான் பயன்படுத்த விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *