திருச்சி கலெக்டர் ஆபீசில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வழக்கத்தை விட அதிகமான மக்கள் வந்திருந்தனர். அவர்களது மனுக்களுக்கு அதிகாரிகள் என்ட்ரி போட்டு கொடுத்ததும் அந்த சீட்டுகளை வாங்கிக்கொண்டு கலெக்டரிடம் சென்று மக்கள் மனு கொடுத்தனர்.
லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேட்டி , சட்டை அணிந்து வந்திருந்தார். அவர் வைத்திருந்த மனுவை வாங்கி படித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம், சிரிப்பு ஏற்பட்டது.
இவ்வளவு மக்கள் வந்து கூடியிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட நகைச்சுவை மன்னர்களும் வந்து விடுகிறார்கள் என்ற நமட்டு சிரிப்புடன் அந்த மனுவை வாங்கிய அதிகாரிகள் அவரை போயிட்டு வாங்க, உங்க கோரிக்கையை அந்த சாமியே நிறைவேற்றட்டும் என அனுப்பி வைத்தனர்.
அப்படி அந்த மனுவில் என்னதான் இருந்தது என அறிய தோன்றுகிறது அல்லவா? அதை நீங்களும் படியுங்கள் இதோ:
என் பெயர் ஆர். தமிழரசன், பெருவளப்பூர் என்ற கிராமத்தில் வசிக்கிறேன். 20 வருடங்களாக இந்தியாவில் உள்ள தெய்வங்கள் என்னிடம் பேசுகின்றன. நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என்று என்னிடம் தெய்வங்கள் எல்லாம் கையெழுத்து வாங்கி இருக்கிறது. இதை ஜனாதிபதி முர்மு அவர்களுக்கும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.