சரத்குமாருடன் ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ’கஜினி’, சிம்புவுடன் ’வல்லவன்’, அஜித் உடன் ’பில்லா’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நம்பர் 1 இடத்திற்கு வந்தார். சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதல் பின்பு முறிவு என பல்வேறு சர்ச்சைகளைக் கடந்த அவர், ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடிக்கும்போது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். நீண்ட காலம் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் விக்கியைத் திருமணம் செய்து கொண்டு வாடகைத் தாய் மூலமாக இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார் நயன்.

தற்போது நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது, தனது இரண்டு மகன்கள், காதல் கணவர் விக்னேஷ்சிவன் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘உம்… நான் இழந்துவிட்டேன்’ என்று நேற்று ஆங்கிலத்தில் பூடகமாக பதிவிட்டிருந்தார் நயன். இந்தப் பதிவைப் பார்த்து அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை அடைந்தனர். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்களா என்றும் தகவல் பரவியது. திருமணம் முடிந்து கொஞ்ச நாட்களே ஆன நிலையில் அதற்குள்ளாக இருவரும் உறவை முறித்துக் கொள்ளப் போகிறார்களா என்று சமூகவலைதள பக்கங்களில் பதிவுகள் பறந்தன.

தற்போது அந்த வதந்திக்கு எல்லாம் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விமானத்தில் பணிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா. கூடவே, ‘Travelling with my boys after so long’ என்று பதிவிட்டுள்ளார்.
எங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை. குடும்பத்துடன் சந்தோஷமாகவே இருக்கிறேன். வதந்தி பரப்புவதை இத்துடன் நிறுத்தி விடுங்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது அவரது இந்த பதிவு. இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களை வட்டமடித்த வதந்தியை நயன்தாரா தற்போது ஒரு போட்டோ மூலம் முடித்து வைத்துள்ளார்.