சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் கவனித்து வருவதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வேத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையாக, சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்தாத ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், சுவிடன் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடாக இந்தியா மாறுகிறது. தற்போதுள்ள டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் ரயில்களில் ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தை மீண்டும் பொருத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக இதனைக் கொண்டு வந்துள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் இந்த ரயிலை வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் அரியானாவில் உள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் வரும் டிசம்பரில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ரயில்கள் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சென்னை ஐசிஎஃப் ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருவதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சோதனைகளுக்குப் பிறகு, இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க உள்ளது. ஒவ்வொரு ரயிலும் ரூ. 80 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு பாரம்பரிய மற்றும் மலைப் பாதைகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.70 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
இந்த ரயில்கள் முதல்கட்டமாக பாரம்பரிய வழித்தடங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
.